கரூர் அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த கல்வெட்டுகள் பற்றி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பதிவு செய்துள்ள ட்வீட் கவனம் பெற்றுள்ளது.


கல்வெட்டு, தொல்பொருள் ஆராய்ச்சி இவை எல்லாம் சாமான்ய மனிதர்கள் புரிந்து கொள்ள கடினமானதாகவே இருந்து வந்தது. கீழடி அகழாய்வுப் பணிகளும் அதன் கண்டுபிடிப்புகளுக்கும் பின்னர் தமிழர்கள் தொன்மை உலகம் முழுவதும் பேசுபொருளானது.


இது சாமான்ய மக்களையும் அகழ்வாராய்சி மீது ஆர்வம் கொள்ள வைத்தது. ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளும் மக்களை ஈர்த்துள்ளது.


இதனாலேயே தொல்பொருள் அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு தொடர்பான செய்திகள் எல்லாம் இப்போது காமன் மேன் இன்ட்ரஸ்ட் பிரிவுக்கு வந்துவிட்டன.






இந்நிலையில் கரூர் ஆட்சியர் தனது ட்விட்டரில், பழமைவாய்ந்த கல்வெட்டு பற்றி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள சிற்றூர் செங்காளி பாளையம். அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும் பெருமாள் கோயில் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன. 


சிவன் கோயிலில் செவ்வக வடிவிலான தனிக் கல்லின் ஒரு பக்கத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்துவடிவில் 13 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. முதல் பத்து வரிகளில் தானம் பற்றிய செய்தியும், இறுதியாக உள்ள மூன்று வரிகளில் வடமொழி வாழ்த்து சுலோகமும் காணப்படுகின்றன.


இப்பகுதி இன்று ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்களை பாதுகாப்பாக கரூர் அருங்காட்சியகத்தில் எடுத்து வந்து வைக்கவும்,  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


கரூர் ஆட்சியர் பிரபு சங்கர், சமூக வலைதளங்களில் சற்று விறுவிறுப்பாக இயங்குவார். அண்மையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரூர் பள்ளி மாணவர் ஒருவர் அவரை டேக் செய்து விடுமுறை கேட்க, தம்பி மழை விட்டுவிட்டுது பள்ளிக்குப் போங்க. நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க. நிறைய படிக்க இருக்குது என பதில் கூறி கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.