விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். 


உயிரிழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம் 


கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் நாட்டையே உலுக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்த  58 பேர் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குறித்து 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 


தடுப்பு வேட்டையில் காவல்துறை


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை அதிரடி கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் இறங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 


இப்படியான நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைப் பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை முதலமைச்சர் அறிவித்தார். அதேசமயம் இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்றும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் எனப்படும் விஷச்சாராயமே உயிர்பலிக்கு காரணம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். இந்த விவாகரத்தில் எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.


முதலமைச்சர் ஆலோசனை.. அறிக்கை கேட்ட ஆளுநர்


ஒருபக்கம்  கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மறுபக்கம் இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மற்றும் மதுவிலக்குத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி, முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 


விளக்கமளித்த டிஜிபி சைலேந்திரபாபு 


இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தகவல்களை வெளியிட்டுள்ளார். 


அதன்படி, “திவாலான தனது தொழிற்சாலையில்  இருந்த 1,200 லிட்டர் விஷ சாராயத்தை அதிபர் இளையநம்பி விற்ற நிலையில் அதனைப் புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலை, ராஜா பெற்றுள்ளனர். இதில் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்கப்பட்டுள்ளது. மீதமிருந்த 1,192 லிட்டர் விஷச்சாராயம் 48 மணி நேரத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் தலைமையிலான 6 தனிப்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் விஷச்சாராயத்தை உயிரிழப்பு நிகழ்ந்த பகுதிக்கு கொண்டு சென்றதாக விஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.