தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், நேற்று (ஜூன்.07) கந்து வட்டி கொடுமையால் கடலூரில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


கந்துவட்டியால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பெண் ஒருவர் முன்னதாகக் கைது செய்யப்பட்டார்.


சைலேந்திரபாபு சுற்றறிக்கை


இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 


அதில், ”கந்துவட்டி கொடுமையைத் தடுக்கும் வகையில் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அனைவரும் ‘அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003’ இன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆபரேஷன் கந்துவட்டி


அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள்.


இந்த வழக்குகள் தொடர்பான கையொப்பமிடப்பட்ட அல்லது வெற்று காசோலைகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட ஆவணங்கள்/மதிப்புமிக்க பத்திரங்கள் உள்பட அனைத்து குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களையும் கைப்பற்றவும்.


இந்த சிறப்பு இயக்கத்துக்கு ’ஆபரேஷன் கந்துவட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் முன்னுதாரணமாக பணியாற்றும் அதிகாரிகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த காவலர்


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு, துறிஞ்சிக் கொல்லையை சேர்ந்த முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). உளுந்தூர்பேட்டை 10ஆவது பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், ஜூன் 1ஆம் தேதி கடலூர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.


இது பற்றித் தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மயங்கிக் கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


கந்துவட்டிக் கொடுமை


இதில் குடும்ப செலவுக்காக வட்டிக்கு பணம் தரும் பெண் ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும், அந்தப் பணத்தை திருப்பி செலுத்தியும் அந்தப் பெண் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், இதனால் மன வேதனை அடைந்த செல்வ குமார் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


முதலிலி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வகுமாரின் உடல் நிலை மோசமான நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், காவலர்கள் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண