மாணவர்கள் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது. 


இதற்கிடையே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 27ஆம் தேதி முதல் அரசு கலைக் கல்லூரிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதுகுறித்துத் தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: 


’’மாணவர்கள் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்க, ஜூலை 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் பிற இட ஒதுக்கீடுகளும் சமூக நீதி அடிப்படையில் முறையாகப் பின்பற்றப்படும்.


கொரோனா காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறத் தாமதம் ஆகியுள்ளது. விரைவில் பட்டமளிப்பு விழா நடைபெறும்’’. 


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


முன்னதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பப் பதிவுக்கு ஜூலை 19 கடைசி என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு, மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண