நடுக்கடலில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. தமிழகத்தை சேர்ந்தவர்களும், இலங்கையை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இருந்து குறைந்த நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.  ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாட்டு படகு, 3 விசைப்படகுகளில் மொத்தம் 76 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர்.



ராமேசுவரத்தில் இருந்து நேற்று பகல் 11 மணி அளவில் புறப்பட்ட இந்த 4 படகுகளும் மதியம் 2 மணிக்கு கச்சத்தீவை சென்றடைந்தன..  தொடர்ந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன், அந்தோணியாரின் திருஉருவம் பதித்த கொடியை இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் ஏற்றினார்.




அதை தொடர்ந்து விழா தொடங்கியது.  ஆலயத்தில் திருச்சிலுவைப் பாதை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்று, இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றன. ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தையும், திருவிழா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளருமான தேவசகாயம் தலைமையில் 4 பங்குத்தந்தைகள், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம் எமரிட் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.  திருவிழாவின் 2-வது நாள்  முக்கிய நிகழ்வான கூட்டுப்பலி தற்போது நடக்கிறது.




இதில் இரு நாட்டுப்பங்குத்தந்தைகள், இந்திய, இலங்கை பக்தர்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை வடக்கு கடற்படை கட்டளை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து,  யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் தலைமையில் 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.  அதன் பின்னர் இந்த திருவிழாவில் கலந்து கொண்ட இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும்  தாங்கள் வந்த படகுகளில் ஏறி சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். கச்சத்தீவில் இன்று திருவிழா முடிந்த பின்னர் பகல் 2 மணிக்குள் 4 படகுகளில் சென்ற பக்தர்கள் ராமேசுவரம் வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.