சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில், மத்திய அரசின் உதான் திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் - சென்னை பயணியர் விமான சேவை தற்போது கொரோனா மூன்றாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையை தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதி தொழிலை சார்ந்த தொழிலதிபர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து சேலம் விமான நிலைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலம் விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் பார்த்திபன் எம்.பி. தலைமையில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவையை துவங்க தேவையான பூர்வாங்க பணிகளை உடனடியாக தொடங்குதல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம் - சென்னை இடையேயான விமான சேவையை மத்திய விமான அமைச்சகம் தெரிவித்தப்படி இந்த மாத இறுதியில் துவங்குதல், சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை நேர விமான சேவை தொடங்குதல், சேலத்தில் இருந்து திருப்பதி, ஹைதராபாத், பெங்களூரு, கோவாவிற்கு விமான சேவை துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து சேவை இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்றார். சேலம் விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் தரை இயங்குவதற்கான வசதிகள் இல்லாததால் மட்டுமே மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை. கூடிய விரைவில் சேலம் விமான நிலையத்தில் இரவு நேரம் விமானங்கள் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்படும் என்று கூறினார். மேலும், சேலம் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அருகில் உள்ள கிராம மக்கள் தங்களது விவசாய நிலத்தை தர மறுப்பதாலும், ஏற்கனவே இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அருகில் உள்ள கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அளித்துள்ளது. விவசாய நிலத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த நிலங்கள் பயன்படுத்தப்படும் என்றார். பயணக் கட்டணம் சாதாரண எளிய மக்களும் பயணிக்கும் வகையில் மாற்றி அமைக்க பதிவு எழுதப்பட்டுள்ளது என்றார். மேலும் சேலம் விமான நிலையத்தில் புதிதாக விமானப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று விமான பயிற்சி பள்ளி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.