வனத்துறை அதிகாரி சுதா ராமன் ஐ.எஃப்.எஸ், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் நிலப் பயன்பாடு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 


யார் இந்த சுதா ராமன்?


சுதா ராமன் பயோ மெடிக்கல் பொறியாளர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாவரங்கள் போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் ஐடி துறையில் இருந்து வெளியேறி இந்திய வனத்துறை (IFS) துறையில் சேர்ந்தார்.


இளம் வன அதிகாரியான சுதா ராமன் யாராலும் முடியாததை செய்துள்ளார். அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் நிச்சயம் பலனளிக்கும் என்பது சுதாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் குறுகிய காலத்தில் பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களில் பங்களித்துள்ளார்.  வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனரான சுதா ராமன் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான டாக்டர் கலாம் இன்னோவேஷன் இன் கவர்னன்ஸ் விருதை வென்ற ஒரு செயலியை உருவாக்கினார்.




வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரி வற்றிப்போனதைக் கண்ட சுதா அதனை சீரமைத்தார். ஏரி புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்ளளவு அதிகரித்தது. ஏரியில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் தடுக்க அணைகள் கட்டப்பட்டன. மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் உயிரியல் பூங்காவில் நிலத்தடி நீர் அதிகரித்தது. அங்குள்ள விலங்குகளுக்கும் பற்றாக்குறை இல்லாமல் நீர் விநியோகம் கிடைத்தது.


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வலைதளத்தை நவீனப்படுத்தும் முயற்சியையும் இவர் மேற்கொண்டுள்ளார். இங்குள்ள விலங்குகளை நேரலையில் பார்க்கும் வசதி, ஆன்லைன் டிக்கெட் வசதி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் பணியில் இவர் பங்களித்துள்ளார்.


தாயை பிரிந்த குட்டியானையை தனது தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் சுதா ராமன் முக்கிய பங்காற்றியுள்ளார். 



இதுமட்டுமில்லாமல் படிக்கும் மாணவர்களுக்கு தன்னால் முடிந்த தன்னம்பிக்கைகளையும் கொடுத்து வருகிறார் சுதா ராமன். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போது சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அப்போது அந்த பதிவு மிகவும் வைரலானது. அதில்,  “எனக்கு மருத்துவராகும் கனவு இருந்தது. ஆனால் BE Biomedical தான் கிடைத்தது. பின் 21 வயதில் திருமணம். விப்ரோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 2 வருடம் கழித்து வேலையை விட்டுவிட்டு பல தடைகளை தாண்டி 2 முறை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதி தோற்றேன். பின்னர் ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்தேன். எனக்கு முதல் முயற்சியிலேயே வனத்துறை அதிகாரியாக பணி கிடைத்தது.




2012 ஆண்டில் மட்டும் 6 வெவ்வேறு அரசு பணி தேர்வுகளை எழுதினேன். எந்த ஒரு தேர்வுக்கும் அறிவியல் படித்தது கிடையாது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு படித்த இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் நன்கு நினைவில் உள்ளது. இன்று வரை பல இடங்களில் அறிவியல் வகுப்புகளை எடுத்து வருகிறேன். தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.