அண்ணா பல்கலை கழகம் சம்பவத்தில் குற்றவாளி 4 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை சேப்பாக்கம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் என்று ஒருத்தர் இருக்கார். அவர் என்ன பண்ணுகிறார். சட்டமன்றத்துக்கு வந்துட்டு போறது மட்டும்தான் அவருக்கு வேலை. தமிழ்நாடு என்ற வார்த்தை பிடிக்காது. தமிழ்தாய்வாழ்த்து பிடிக்காது. இதையெல்லாம் ஒரு காரணமாக காட்சி வெளிநடப்பு செய்து போய் கொண்டிருக்கிறார். 


எதிர்க்கட்சிகள் என்ன பண்றாங்க? அவர்களுக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை. சமீபத்தில், சென்னையில் ஒரு பல்கலை கழகத்தில் தவறான சம்பவம் நடந்துவிட்டது. கண்டிப்பாக வருந்ததக்க சம்பவம்தான். ஆனால் நம் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். 


குற்றச்சம்பவம் நடைபெற்ற 4 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் உங்களுக்கு நியாபகம் இருக்கும். பல மாதங்கள் ஆகியும் பல பெண்கள் பாதிக்கப்பட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள். கடைசியாக சிபிஐ வந்தபிறகுதான் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். நம்முடைய ஆட்சியில் எந்த ஒரு குற்றவாளியையும் முதலமைச்சர் தப்பிக்க விடமாட்டார். 


இதை முதலமைச்சரும் சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார். பொங்கல் விழாவை கலைஞர் சமத்துவ பொங்கல் என்று கூறுவார். அனைவரும் கொண்டாடக்கூடிய விழா என்றால் அது பொங்கல் தான். ஜாதி, மதம் பார்க்காமல் ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவருக்குமான பண்டிகைதான் இந்த சமத்துவ பொங்கல். அனைவருக்கும் என் சமத்துவ பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் ஒரே அணியாக இருந்து 200 என்பது நமது இலக்கு. அது சேப்பாக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, அண்ணா பல்கலை வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குற்றம் செய்த குற்றவாளி ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில் குற்றவாளி யாரோ ஒருவரை தொலைபேசியில் சார் என அழைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதைத்தொடர்ந்து யார் அந்த சார் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். யார் அந்த சார். ஆதாரம் இருந்தால் விசாரணை குழுவிடம் கொடுங்கள். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்காது” எனத் தெரிவித்தார்.