பொங்கல் தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படாத நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
நேற்றைய தினம் சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது பொங்கல் தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படாததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழ்நாடு சந்தித்துள்ள பல்வேறு பேரிடர்களையொட்டி ஒன்றிய அரசிடம் கேட்ட ரூ. 37,817 கோடியில், இதுவரை ரூ. 276 கோடி மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதுவும் நமது மாநில பேரிடர் நிதிக்கு வழங்க வேண்டிய தொகை. இதேபோல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 2151 கோடியும் இது வரை வழங்கப்படவில்லை.
தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் நிதிகளைத் தராமல் வஞ்சித்து வருவதன் விளைவாக, ஒன்றிய திட்டங்களுக்கான செலவினங்களையும் மாநில அரசே செய்து வருகிறது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையின் காரணமாகவே இந்த முறை ரூ. 1000 வழங்கப்படாத நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.