கரூர் தபால் நிலையம் முன்பு  மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், கடந்த காலங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போரையும், அதில் உயிரிழந்த நபர்களை நினைவு படுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை பயிற்று மொழியாகவும், நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்க அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




பதினொரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஹிந்தியை திணிக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.‌ அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற  பாஜக அரசு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில நெசவாளர் அணி செயலாளர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்குப்பெற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் கடந்த காலங்களில் ஹிந்தி மொழிக்கு எதிராக நடைபெற்ற மொழிப்போரை நினைவு படுத்தியும், மொழிக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.




கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஹிந்தி திணிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முக்கிய நிர்வாகிகளும் மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களும், நகர, பேரூர் கழக நிர்வாகிகளும் மாநகராட்சி நகர்மன்ற மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் கரூர் மத்திய நகர, கிழக்கு நகர, வடக்கு நகர, மேற்கு நகர திமுக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.




திமுக இளைஞரணி சார்பாக சில நாட்களுக்கு முன் திமுக மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தி குறிப்பில் மாவட்ட தலை நகரங்களில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில் இன்று நடைபெற்ற ஹிந்தி திணிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். எனினும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. முக்கிய சாலையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் பகுதி சுற்றிலும் திமுகவினர் கொடியை கட்டி பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.