உலக செவிலியர் தினத்துக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் ஒருவருக்கு வாழ்த்துச் சொல்லப்போக நமக்கு அடுத்தடுத்து கிடைத்தன சில கதிகலங்கவைக்கும் தகவல்கள்.
‘எங்க நர்ஸ் சாமுண்டீஸ்வரி அக்கா ரெண்டு நாள் முன்ன இறந்துட்டாங்க.கொரோனா வார்டு பார்த்தவங்க. ஸ்டாஃப் நர்ஸ்ங்க இறக்கற எண்ணிக்கை அதிகமாகிட்டு இருக்கு. இது எதுவுமே வெளியே தெரியுறது இல்லை. இதுல யாருக்குங்க செவிலியர் தினம் கொண்டாடத் தோனும்’ என்கிறார் அந்தச் செவிலியர்.
நர்ஸ் சாமுண்டீஸ்வரியின் கொரோனா மரணம் தமிழ்நாட்டின் முதல் செவிலியர் மரணமல்ல. சரியாக ஒருவருடத்துக்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 58 வயதுச் செவிலியர் ஜோன் பிரிஸில்லாவின் மரணம் உங்களுக்கு நினைவிருக்கலாம். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் செவிலியர் கொரோனா மரணம். தன் மகள் மற்றும் மாற்றுத்திறனாளி மகனுடன் தனது இறுதிக்காலத்தைத் திட்டமிட்டிருந்த பிரிஸில்லாவின் எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த செவிலியர்களையும் குலை நடுங்கவைத்தது.
’பிரிஸில்லாவுக்குப் பிறகு முதல் அலை காலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் இறந்தார்கள். ஆனால் இரண்டாம் அலைக் காலத்தில் ஒரே மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று செவிலியர்கள் இறந்துள்ளார்கள்’ என்கிறார் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வளர்மதி. ’இந்த அடுத்தடுத்த இறப்புகள் தாங்கமுடியாததாக இருக்கிறது. எல்லாருடைய மனதிலும் சேவை மனப்பான்மை இருந்தாலும். தொற்று பாதித்துவிடும் என்கிற பயமும் இருக்கிறது’ என்கிறார் அவர்.அவருக்குக் கிடைத்த தரவுகளின்படி கடந்த மார்ச் 2020 தொடங்கி கொரோனாவால் மரணமடைந்த செவிலியர்களின் எண்ணிக்கை. அதில் சிலரது பெயர்கள் பதிவு செய்யப்படாமலும் விடுபட்டிருக்கின்றன.
ஆனாலும் இந்த எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள் சென்னை அரசு மருத்துவமனைகளின் செவிலியர்கள். செவிலியர்களின் கொரோனா இறப்புகளைப் பதிவு செய்வதில் பிரிஸில்லா மரணம் தொடங்கியே பல குழப்பங்கள் இருந்துவந்தன முதலில் அவருக்குக் கொரோனா நெகடிவ் எனச் சொல்லப்பட்டு பாதித்தவர்கள் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் பாசிடிவ் என உறுதிசெய்யப்பட்டு தொண்டையிலிருந்து எடுக்கப்படும் ஸ்வாப் (Swab) மாதிரிகள் நெகடிவ் என வந்ததால் உண்டான குழப்பம் அது என அப்போது தெளிவுசெய்யப்பட்டது.
நரகம் என்று தெரிந்தே தள்ளப்படும் குழியில் நர்ஸ்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கொரோனா வார்டுகளின் நிதர்சனம்.இதற்குத் தீர்வு என்ன?
வெள்ளை உடை தேவதைகளின் வேதனைக்குரல் அரசுக்குக் கேட்குமா?