தமிழ்நாடு அரசு வழங்கும் கொரோனா நிதி உதவி நான்காயிரம் ரூபாயை  அரிசி அட்டை வைத்துள்ள மத்திய,  மாநில அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க தடைவிதிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்றது. திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் மனுவில், ’அரிசி பெறும் குடும்பஅட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய மாநில அரசு நிறுவனங்களான வங்கிகள்,மின்வாரியம், பி.எஸ்.என்.எல்.,எல்.ஐ.சி., ரயில்வே மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள்,அரசு மற்றும் அரசு நிதியுதவி பெற்று இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் ,இதர கல்வி நிறுவனங்கள்.


மேற்படி துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிசெய்து ஓய்வுபெற்றவர்கள் அனைவருக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பளக் குறைப்புமில்லாமல் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்திலும் அவ்வாறே சம்பளம் வழங்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு செளகரிய குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வருமான இழப்பு இல்லை. 


அதனால் இவர்களுக்கு ரூ.4000 கொரோனா நிதியைத் தரக்கூடாது. அவர்களுக்கு வழங்கும் அந்த பணத்தைக் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்க, புதிய ஆக்ஸிஜன் ஆலையை அமைக்க,ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து போடுவதை இலவசமாக போடச் செய்ய என எத்தனையோ ஆக்கபூர்வமான பணிகளுக்கு செலவழிக்கலாம்” எனக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்த விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.