சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 70 லட்சம் மின் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை உரிமம் பெற்ற மீனவர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது. இறந்து போன ஜிலேபி, அரஞ்சான், கெளுத்தி, ஆறால் போன்ற மீன்கள் கரை ஒதுங்கியதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டன் கணக்கில் மீன்கள் இறந்து போனதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 


காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் நீரை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அணையில் நீர்த்தேக்க பகுதிகளில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீரேற்று நிலையங்களை சுற்றிலும் இறந்து போன மீன்கள் காணப்படுவதால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த நீரை அருந்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 



மீன்கள் இறப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்து காரை ஒதுக்கியதாக தகவல் தெரிவித்தனர். இருப்பினும் மேட்டூர் அணையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதா அல்லது வேறு ஏதாவது காரணமா என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை ஆய்வு செய்து மீன்கள் இறப்பதற்கான உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மேட்டூர் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்திலிருந்து திறந்த விடப்பட்ட தண்ணீரில் விவசாய கழிவுகள் கலக்கப்பட்டதால் பச்சை நிறத்தில் தண்ணீர் மாறியது. அப்போது மேட்டூர் அணையில் மீன்கள் இறந்த கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசியது குறிப்பிடத்தக்கது.