அக்டோபார் மாதம் 11ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் வரை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நாளை மறுநாள் வரை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு 55வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு குளிர்க்கால சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு கேள்வி நேரம் தொடங்கிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அருகே அமராமல் தன்னுடைய எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு, குடிநீரை நிச்சயம் முதல்வர் தருவார். அந்த அணையில் தண்ணீர் காலியாகாமல் இருக்க ‘தெர்மாகோல்’ போட்டு நாங்கள் மூடி வைத்துள்ளோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதில் அளித்ததில் அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியதில், “ 9.19 டிம்எம்சி கிடைக்கவேண்டிய நிலையில் 2.283 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அமைச்சரை சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை” என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் அவர் தனது உரையில், இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மேட்டூர் அணை உழவர்களுக்கு சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021-46.2 லட்சம் நெல் உற்பத்தி, 2022- 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
தனி தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “ இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்று சொல்ல ஆரம்பித்தால் காலம் எடுக்கும். விவசாயிகள் நலனை முன்னெடுத்து சட்டரீதியான அனைத்து நடவடிக்கையும் எடுத்தது பாஜக அரசு. கர்நாடக மாநில அரசு மீதான எந்த விமர்சனம் இல்லாமல் மத்திய அரசு மீதான விமர்சனத்தை கொண்டு வருவது ஏன்? இரட்டை நிலையை வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து பாஜகவுக்கு இல்லை. காவிரி விவகாரத்தில் தனித்தனியாக தீர்வு காண முடியாது” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது.