கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி மாவட்ட அறங்காவலர் குழு சார்பில் சிறப்பு யாகம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அறங்காவலர் குழுவினருடன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி நெரூர் காசி விஸ்வநாதர் கோயிலில் 500 பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு.
கரூர் மாவட்டம், நெரூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் பூரண நலம் பெற வேண்டி கரூர் திமுக மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கோவில் வளாகத்தை சுற்றிலும் சுமார் 500 பெண்கள் தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்கில் எள் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.