செம்பரம்பாக்கம் ஏரியின் விவரங்கள் குறித்து அதிகமாக கேட்டறிந்தார். உள்வாங்கி கோபுரத்தில் ஆபத்தான முறையில் திறந்து கிடந்த பள்ளத்தை பார்த்து கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

 

செம்பரம்பாக்கம் ஏரி ( chembarambakkam lake )

 





காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : கடந்த மூன்று தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 19.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2530 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1424 கன அடியாக உள்ளது. தொடர்ந்து கன மழை நீடித்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 



 

நீர்மட்ட உயரத்தையும் தொடர்ந்து கண்காணிப்பு 

 

தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 20 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து, ஏரிக்கு வரும் நீரின் அளவையும், நீர்மட்ட உயரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

உபரி நீர் செல்லும் வழி

 

செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு, 19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்து உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிநீராக மாற்றப்படுகிறது. கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது, குறித்த பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் செல்லும் வழித்தடங்களை செம்பரம்பாக்கம் ஏரி உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன் வரைபடங்களை காண்பித்தார்.



 

யாராவது விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டால் ?

 

மேலும் வழித்தடங்கள் குறித்து  கலெக்டர் தனது செல்போனில் கூகுள் மேப்பில் பார்த்து தெரிந்து கொண்டார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள உள்வாங்கி கோபுரத்தில் ஆய்வு செய்தபோது அங்கு பல இடங்களில் ஆபத்தான முறையில் பள்ளங்கள் திறந்து கிடந்தது. இந்த வழியாக வருபவர்கள் யாராவது விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என அதிர்ச்சடைந்து அதிகாரியிடம் உடனடியாக அதனை மூடும்படி கடிந்து கொண்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கலைச்செல்வி மோகன் புதிய கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் முழு விவரங்கள் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.


 

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு




தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


22.06.2023 மற்றும் 23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.




Join Us on Telegram: https://t.me/abpnaduofficial