திருவாரூரில் உள்ள காட்டூர் கிராமத்தில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு கோட்டத்தை பார்வையிட்டு வருகிறார். ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டத்தில், கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், பழைய புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. 


7 ஆயிரம் சதுரடியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்  வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜூன் 3 ம்  தேதி இந்த கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி திறப்பு விழா நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. பின் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இன்று அதாவது ஜூன் மாதம் 20ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 


அதேபோல், இந்த கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலார் நூலகத்தினை பீகார் துணை முதலமைச்சர் தேஜ்ஸ்வி யாதவ் திறந்து வைத்தார். 


இந்த கோட்டத்தில் மொத்தம் 2 திருமண மண்டபங்கள் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது நான்கு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 


இந்த கோட்டத்தில், கருணாநிதியின் இளமை கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் என காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் முன்பக்கத்தில் கலைஞர் திருவுருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் இந்த கலைஞர் கோட்டத்தினை பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்து வைப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்ப்பட்டது. இன்று காலை தமிழ்நாடு வரவிருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி, கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்க வரமுடியாத சூழல் ஏற்பட்டது. 


இதனால் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள எதிர்கட்சியில் இருந்து முக்கிய தலைவர்களும் கலந்து  கொண்டுள்ளனர். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், திமுக அமைச்சர்கள், திமுக கூட்டணிக்கட்சியினர் என பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 




சுவாரஸ்யமான செய்திகளுக்கு ஏபிபி நாடு டெலிகிராமில் இணைய இங்கு க்ளிக் செய்யவும்