வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. இதனால் சென்னையில் இருக்கும் அனேக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பலர் சிக்கி உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை வருவதற்கு முன்னதாக அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் பணிகள் மும்மரமாக நடைபெற்றது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறி சென்னைக்கு அருகில் கடந்து சென்று ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடந்தது.
இதனால் ஞாயிற்றுகிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை மாலை வரை சூறைக்காற்றுடன் அதிகனமழை பெய்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மழை நீரால் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மடிப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, துரைப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரைத்தளம் மூழ்கும் அள்விற்கு நீர் சூழந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரன், உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். 3 நாட்களாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர். மீட்பு படையினர், இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தீயணைப்பு துறையினர் என அனைவரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க காலை முதல் 4 ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து பதிவு செய்ய மாநகராட்சி மற்றும் காவல் துறை தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் சில பகுதிகளில் மின்சாரம், உணவு, தொலை தொடர்பு என எந்த ஒரு வசதியும் இல்லாமல் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.