“மிக்ஜாம்” புயல்:

மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நேற்று முந்தினம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது.  தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். 

Continues below advertisement

இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய விமானப்படை, கடலோர காவல்படி, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டௌ வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

“மிக்ஜாம்” புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் / அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கீழ்க்காணும் அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு / தகவல் அனுப்பி, பதிவு செய்து கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப் எண்கள்:

ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789

பாபு, உதவி ஆணையர் - 9445461712

சுப்புராஜ், உதவி ஆணையர் - 9895440669

பொது - 7397766651

நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் / தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.