மிக்ஜாம் புயலால் கடந்த இரு தினங்களாக சென்னையில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி இரவு வரை சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்க தொடங்கியது. 


இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்தனர். தண்ணீர் தேங்கியதால் கடந்த 2 நாட்களாக புறநகர் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல் விமான சேவையும் பெருமளவு முடங்கியது. மெட்ரோ ரயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்பட்ட நிலையில், தண்ணீரின் அளவை பொறுத்து பல இடங்களுக்கு  மிக மிக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டது. 


மேலும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு கடந்த இரண்டு நாட்களாக சம்பந்தப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்னும் வெள்ளநீர் வடியாத காரணத்தாலும், பள்ளி, கல்லூரிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாலும் இன்று ஒருநாள் மட்டும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


இதனிடையே நேற்று முழுவது மழை முற்றிலுமாக நின்றதால் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இப்படியான நிலையில் சென்னையில் மீண்டும் பொதுபோக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விமான சேவை இன்று முதல் வழக்கம்போல இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேருந்துகளும் பல இடங்களில் தண்ணீர் குறைந்து விட்டதால் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. 


புறநகர் ரயில் சேவை 


சென்னையில் கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வரையிலான வழித்தடத்திலான புறநகர் ரயில்கள் தண்டவாளத்தில் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று மாலை முதல் இயங்கி வருகிறது..


இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியதாவது, சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  மேலும், திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும்/ வரும் ரயில்கள் சில இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.