மிக்ஜாம் புயலால் சென்னையில் பால் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் நிலைமை சீரடைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னை தண்ணீர் தீவு போல காட்சியளித்தது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த 2 தினங்களாக பொதுவிடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் சென்னையில் அனைத்து விதமான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு கூட பால் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் உதவி கேட்டனர். பல இடங்களில் வரிசையில் நின்று பால் பாக்கெட்டுகளை பெற்று சென்றனர். 


இதனிடையே, ‘தனியார் நிறுவனங்கள் களத்தில் இல்லாத காரணத்தால் பால் தேவை அளவுக்கதிகமாக அதிகரித்தது’ என அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மேலும், ‘ஆவின் நிறுவனம் வழக்கமாக சென்னையில் விநியோகிக்கும் 15 லட்சம் லிட்டர் பாலை கடும் மழை புயலை பொருட்படுத்தாமல் விநியோகம் செய்துள்ளது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறோம். பிற மாவட்டத்தில் இருந்து பால் வரவழைக்கப்பட்டு சென்னை மக்களுக்கு கொடுக்கப்பட்டது.






பால் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பால் பவுடர் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.பேரிடர் காலத்தில் இப்படி ஒரு அவசர சூழல் உருவாவது இயல்பு தான், ஆனால் ஆவின் தரப்பில் பால் விநியோகம் செய்வதில் எந்த கவனகுறைவும் இருக்காது’ எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் பால் விநியோகம் சீராக தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பால் விநியோகம் தடைப்படாமல் சீராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், “இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.