மிக்ஜாம் புயலின் பாதிப்புகள்


மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிப்புரம், செங்கல்பட்டு , திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மேல்மட்டம் அளவிற்கு நீர் புகுந்துள்ளதால் மக்களை அவர்களின் வீட்டில் இருந்து படகின் மூலம் வெளியேற்றி வருகிறார்கள் மீட்பு படையினர்.


மேற்குறிப்பிட்ட இடங்களில் பலவற்றில் பாதுகாப்பு காரணங்களால்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொலை தொடர்புகள் அற்று மக்கள் தங்களது அருகில் இருக்கும் குழுக்களிடம் உதவிகளை நாடி இருக்கிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் நீரில் இருந்து தப்பிக்க குழந்தைகள் , பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட தங்களது வீட்டில் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளார். தற்போதைய நிலைக்கு அவர்களின் முதன்மையான தேவையாக உணவு இருந்து வருகிறது. மீட்பு படையினர் தங்களால் எட்ட முடிந்த அளவிற்கு உணவு வழங்கி வந்தாலும் ஒரு சில இடங்களில் மக்களை தொடர்பு கொள்வது சிரமானதாக இருந்து வருகிறது.


ஹெலிகாப்டர் மூலம் உணவு






இப்படியான நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது இந்திய விமானப் படை. முதற்கட்டமாக அடையாறு மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் 500 உணவுப் பொட்டலங்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்பட்டன. இந்த உணவுப் பொட்டலங்களை மக்கள் தங்களது வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். நாளை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் உணவு விநியோகம் நடைபெற இருப்பதாக  வருவாய்த் துறை அமைச்சர் கே.கே எஸ். எஸ் .ஆர் தெரிவித்துள்ளார்.


மிக்ஜாம் புயல்


நேற்று முன் தினம் சென்னையை நெருங்க தொடங்கிய மிக்ஜாம் புயல் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து ஆக்ரோஷத்தை தொடங்கியது. சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்த போது தொடங்கிய கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்றிரவு வரை தொடர்ந்து. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்திற்கு இதுவரை 12 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.