மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறி விட்ட நிலையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரியை ஒட்டிய இடங்களுக்கு புயல் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இந்த “மிக்ஜாம்” புயலானது தற்போது தீவிரமடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 90 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல் 8 கி.மீ., வேகத்தில் இந்த புயலானது நகர்ந்து வருகிறது.


மேலும் இந்த புயல் வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (கனமழைக்கு வாய்ப்பு), மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  






சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 29 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்றும் அடித்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் முதல் கோயம்பேடு வரையிலான சாலை, சென்னை - திருச்சி சாலை, வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, அண்ணா சாலை, பிராட்வே ஆகிய இடங்களில் மழை வெள்ளம் சூழந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. 


சென்னையில் இரவில் இருந்து மழையின் வேகம் படிப்படியாக குறைய தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று ரெட் அலர்ட்டில் இருந்த சென்னை இன்று ஆரஞ்சு அலர்ட்டுக்கு மாறியுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.