சென்னையில் மிக்ஜாம் புயல் அதன் கோர முகத்தை காட்டி வரும் நிலையில் 70 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளிட்டுள்ளது. 


தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்து விட்டது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருகிறது. புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.10 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயலானது வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே சென்னை மாநகர் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சுற்றி வெள்ளநீர் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் புறநகர் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளும் மிக குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்து விட்டதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஏராளமான மக்கள் ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 






தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள்  தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் வனத்துறை சார்பில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்தால் அதனை பிடிக்கும் ஊழியர்கள் விவரத்தையும் பெருநகர சென்னை  மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மேலும் நீர் நிலைகள் அருகே மக்கள் செல்லா வண்ணம் தடை செய்யப்பட்டுள்ளது. 


விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர் புகுந்ததால் ஓடுதளம் மூடப்பட்டுள்ளது. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சென்னை மாநகராட்சி இன்று (டிசம்பர் 4) 70க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோரின் செல்போன் எண்களும் மண்டல வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.