மாண்டஸ் புயல் இன்று நல்லிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் தொடங்கி லேசான மழை பெய்து வருகிறது. இன்று நல்லிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 



மேலும், வருகின்ற 11 ஆம் தேதி வரை கனமழை உள்ளதால் சேலம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நீர்வள ஆதாரத்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, சுகாதாரத்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை. மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 



குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய அனுமதி பெறாமல் எந்தவித விடுப்பும் எடுக்கப்பட வேண்டாம் எனவும், மழையின்போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் விழ நேர்ந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள், ஜெ.சி.பி இயந்திரம் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


சேலம் மேட்டூர் அணை மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து உடனுக்குடன் தலைமை இடத்திற்கு அறிக்கை அனுப்பிடவும், உபரி நீரை வெளியேற்ற நேர்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்குதடையின்றி குடிநீர், பால், மருந்து இருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டி உள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிரிப்பு பகுதிகளில் தொடர் மழை உள்ளதால் மேட்டூர் அணையில் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் உபரி நீர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசரகாலத் தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427 2450498, 0427 2452202 மற்றும் 91541 55297 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் கடுமையான குளிர் இருப்பதால் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தேவை என்று வெளியில் செல்ல வேண்டாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.