கடலூரில் சிப்காட் தொழில் வளாகம் இயங்கி வருகிறது. இதில், கிரிம்சன் ஆர்கானிக் என்ற தனியார் ரசாயன தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.


இந்த நிலையில், இன்று காலையில் இந்த நிறுவனத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பாய்லரில் இருந்து அமோனியா வெளியேறியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் பரவியது. இதனால், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதில், புகைமூட்டத்திற்கு நடுவே மாட்டிக்கொண்ட சவீதா என்ற பெண் உள்பட  4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.




4 பேர் உயிரிழந்ததது தவிர 10-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் உடனடியாக அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர். விபத்து நடைபெற்ற தனியார் ரசாயன தொழிற்சாலைக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.


இந்த சூழலில், இந்த விபத்திற்கு தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று கூறியும், அதனால் ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  "கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கிரிம்சன் நிறுவனத்தில் இன்று(13.5.21) அமோனியா பாய்லர் வெடித்ததில் அமோனியா வாயு வெளிவந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கணபதி, காரைக்காட்டைச் சேர்ந்த சவீதா, புவனகிரி பகுதியைச் சேர்ந்த விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் காயம் அடைந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




”இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இதுபோன்று அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நடைபெறுவதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.