கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் மாவட்டங்களில் அடுத்த 6 முதல் 8  வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு தொடர்பான நேர்காணலில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்," பொது முடக்கத்தை அறிவிப்பதில் மத்திய அரசு சற்று தயக்கம் காட்டியது உண்மைதான்" என்று தெரிவித்தார். 


மாவட்டங்களில் 10%க்கும் கூடுதலாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் இருந்தால் உடனடியாக முழு ஊரடங்கு அமல்பபடுத்தப்பட வேண்டும் என்று கோவிட்- 19 தேசியப் பணிக்குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது என்று தெரிவித்ததார். அதே நேரம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி கொரோனா நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "மாநில அரசுகள், பொது முடக்கத்தைக் கடைசி உத்தியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும்,  மிகச் சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாம் கவனம் செலுத்தி, நம்மால் இயன்ற அளவு பொது முடக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார் 


கடந்த ஏப்ரல் 26ம் தேதி உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் , " கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை 14 நாட்களுக்கு செயல்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.  


533 மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவைப்படுகிறது: நாடு முழுவதிலும் உள்ள 718 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 533  மாவட்டங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது.   மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். 




தமிழகத்தில் மட்டும் 34 மாவட்டங்களில் இந்த விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது. அதாவது, இந்த 34 மாவட்டங்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் குறைந்தது 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது.  


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த 10 ஆம் தேதி முதல்  முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், 24-ம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். எனவே, தற்போது முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 


இந்தியா கொரோனா நிலவரம்:       


கடந்த 24 மணி நேரத்தில் 4,205 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இதில், 73% உயிரிழப்புகள் வெறும் 10 மாநிலங்களில் காணப்படுகிறது.




அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பதிவான மொத்த பாதிப்புகளில், 71% பாதிப்புகள் வெறும் 10 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டவையாகும்.