தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.


தற்போது இரண்டாவது சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக அருகே உள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக சுற்றியிருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.  இருபினும் தற்போது அதற்கு எதிர்ப்பு நிலவி வருவதால் நிலம் கையகப்படுத்தும் பணி தடைப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் தற்போது இறுதி நிலையில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது, மேலும் தற்போது உள்ள நிலக்கரி டிசம்பர் மாதம் வரை தான் பயன்படுத்த முடியும் என தகவல் வந்துள்ளன,


நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.


நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்எல்சி சுமார் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.447 கோடி, அதாவது 1 சதவீத தொகையை மட்டுமே என்எல்சி ஒதுக்கியுள்ளது. இது மிக மிகக் குறைவு. இவ்வளவு தீமைகளை செய்து வரும் என்எல்சி நிறுவனம், இன்னும் 12,250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரியை வெட்டி எடுக்கத் தொடங்கினால் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது. என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.


நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று  கூறப்படுகிறது. பொறியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து நிலை பதவிகளிலும் பிற மாநிலத்தவர் தான் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கூட பிற மாநிலங்களிலிருந்து தான் வரவழைக்கப்படுகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் மண்ணின் மைந்தர்களும், நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.


மேலும், என்எல்சி சுரங்கங்களுக்கு நில எடுப்பால் பாதித்த கிராமங்களின் நில உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.


மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:


என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம்-1, சுரங்கம்-1ஏ, சுரங்கம்-2 ஆகிய சுரங்கங்களுக்கு தேவைப்படும் நிலங்கள் குறித்து அரசால் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சிகளை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அமைச்சர்களின் தலைமையில் நில எடுப்பால் பாதித்த கிராமங்களின் நில உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தி மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு என்எல்சி இந்தியா நிறுவனம் நிலஎடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு பெற பயிற்சிகள் அளிக்கவும், உயர் இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளது.




மேலும், வேலையில் சேரவிரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.7000/- முதல் ரூ.10,000/- வரை (மூன்றுபிரிவுகளில்) 20 வருடங்களுக்கு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ரூ.500/- உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித்தொகை பெற விரும்பாதவர்களுக்கு வேலைக்கு பதிலாக, ஒருமுறை வழங்கப்படும் வாழ்வாதாரத் தொகை ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். மக்கள் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலை வாய்ப்பு மற்றும் இதர பலன்களை தன் விருப்பத்திற்கேற்ப பெற விழைவோர் உரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட வருவாய் அலுவலர் (NLC நிலஎடுப்பு) நெய்வேலி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நிலத்திற்கான உரிய பணபலன்களைப் பெற்று நிலத்தை ஒப்படைத்தபின் வேலை வாய்ப்பானது முதுநிலை வரிசை (Seniority) அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படவுள்ளதால் நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விரைவில் மாவட்ட வருவாய் அலுவலர் (NLC நிலஎடுப்பு) நெய்வேலி அவர்களிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு கூறியுள்ளார்.