TNEB; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை, ஆனால் கட்டாயம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,



  • 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மின்சாரத்துறையிடம் இருந்து மானியம் பெறும் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்.

  • அவர்கள் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.

  • அதேநேரத்தில் அரசிடம் இருந்து எந்தவிதமான மானியமும் பெறாதவர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தால் தான் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்றுதான் கட்டணத்தினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • மின் இணைப்பு பெற்றிருப்பவர் இறந்திருந்தால், அவர் இறந்ததற்கான தக்கச் சான்றிதழ்களை சமர்பித்து, பெயர் மாற்றம் செய்த பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம். அதனை இந்த சிறப்பு முகாம்களிலேயே செய்து கொள்ளலாம். 


இவ்வாறு மின்சாரத்துறை கூறியுள்ளது. 


சிறப்பு முகாம்:


இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பேசும்போது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரிய அலுவலகத்திற்கு வருபவர்கள், மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ள தொலைபேசியை உடன் எடுத்து வர வேண்டும் என கூறினார். மேற்கொண்டு அவர் கூறுகையில், இதுவரை 15 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என்றும், 2811 பிரிவு அலுவலகங்களில் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும் கூறினார்.


மேலும், அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என கூறிய அவர், முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 1 கோடியே 15 லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் உள்ளதாக கூறிய அவர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்கும் பணிகள் குறித்து வலியுறுத்தியுள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.


அச்சம் வேண்டாம்:


பொதுமக்களுக்கு எந்த வித அச்சமும் தேவையில்லை எனவும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மின்சார வாரியத்தை மேம்படுத்தவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்து 516 கோடி வட்டி கட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஆதார் இணைப்பு அவசியம்:


மின்கட்டணம் செலுத்த தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதாககூறிய அவர், அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், 50 ஆயிரம் பேர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தெரிவித்திருந்தார்.