கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த மாதம் 6ஆம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோபுரங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 3 புதிய கலசங்கள் அமைக்கப்பட்டன. இதில் 300 கிராம் தங்க முலாம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி நள்ளிரவு விருத்தாம்பிகை அம்மன் கருவறை கோபுரத்தில் இருந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கோயில் கும்பாபிஷேகம் முடிந்த 22-ம் நாளில் கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 



 

இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார் தனிப்படை அமைத்தார் இதனடிப்படையில் விருத்தாசலம் டிஎஸ்பி அங்கித் ஜெயின் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன், விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த தனிப்படை காவல் துறையினர் விருத்தகிரீஸ்வரர் கோயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். கோயில் சிசிடிவியில் எந்த நபரும் பதிவாகவில்லை பிறகு வீடுகளில் உள்ள சிசிடிவி களை ஆய்வு மேற்கொண்டபோது அதில் மர்மநபர் ஒருவர் வடக்கு கோபுரம் அருகே உள்ள மதில்சுவர் மீது ஏணியை போட்டு ஏறி அம்மன் கருவறை கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்களையும், 2 சாக்கு பைகளில் கட்டி மீண்டும் அதே வழியாக இறங்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வைத்து தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

 



 

அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் விசாரணையில் ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் அகரம் எனும் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (48) என்பவர் தான், 3 கலசங்களையும் கொள்ளையடித்து சென்று தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர், சந்தோஷ்குமாரை மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த 3 கலசங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படு்த்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சந்தோஷ்குமாரை, விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.