பப்ஜி விளையாட்டை முன்வைத்து அவர் செய்த லீலைகளின் அடிப்படையில் கைது செய்து, குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன், கடுமையான தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் அங்கும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ நேரடி பேரம் பேசப்பட்டு, அதற்காக மதன் மனைவியிடம் 25 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் லஞ்சமும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக்காவலர் ஒருவர், மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பப்ஜி மதன் கைதின் போது, ஜாமினில் வந்த அவரது மனைவி கிருத்திகாவிடம், ‛சொகுசு கார் எப்படி வந்தது’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கிருத்திகா, ‛தங்களிடம் எந்த சொகுசு காரும்... இல்லை என்றும், ஆடி கார் மட்டுமே உள்ளதாக’ பதிலளித்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பின் தன்னை பார்க்க வந்த மனைவியிடம், ‛சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே... நம்மிடம் இருப்பது சொகுசு கார் தான்’ என மதன் கூறியதும் நடந்தது.
காரில் சொகுசு இல்லை என்று கூறிய கிருத்திகா, தன் கணவரின் சொகுசுக்காக சிறைகாவலரிடம் பேரம் பேசி, அதற்காக பணமும் அனுப்பியுள்ளார்.
பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது புழல் சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் மருத்துவர் நவீன் மானாமதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்