தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 


மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்று பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்'  காத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 


இதையடுத்து, திமுக தலைமை கழகம் அறிவித்த அறிவிப்பை மீறி போட்டியிட்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வென்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முக ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, தளபதி அவர்களின் தலைமைப் பண்பைப் பாராட்டுகிறோம் என்று திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமிடையே குழப்பங்கள் ஏற்பட்டு நாடுதழுவிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, திமுகவுக்கு எதிராக அவை அனைத்துத் தரப்பினரின் பேருரையாடலாக மாறின.


இத்தகைய சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சில கருத்துகளை வெளியிடும் நிலை உருவானது. அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் பறிபோன உரிமைகள் ஒரு புறமிருந்தாலும் கூட்டணியின் மீதான நன்மதிப்பைக் காப்பாற்ற வேண்டிய தேவையும் எழுந்தது. அதனடிப்படையில் "கூட்டணி அறத்தைக்" காப்பாற்ற வேண்டுமென விசிக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகவும் முதிர்ச்சி நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. தேர்தலில் நடந்தேறிய குழப்பங்களின் விளைவாக  ஆதங்கத்தை வெளிப்படுத்திய எமக்கு ஆழ்மனதை உலுக்குவதாகவும் உள்ளது. முதல்வரின் இத்தகைய போற்றுதலுக்குரிய தலைமைப் பண்பை விசிக சார்பில் நெஞ்சாரப் பாராட்டுகிறோம்!


ஒருசில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த அத்துமீறல்களுக்கும் திமுக தலைமைக்கும் தொடர்பில்லையென்பது நாடறிந்த ஒன்று. எனினும், அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர் வினையாற்றியிருப்பது மிகுந்த ஆறுதலையும்  நம்பிக்கையையும் அளிக்கிறது. 


“ திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலகிட வேண்டும்” என அறிவித்துள்ளார். இதன்மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உறுதி குலையாமல் காப்பாற்றியுள்ள அண்ணன் தளபதி அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


திமுக தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி தேர்தல் கூட்டணி மட்டுமல்ல கொள்கைக் கூட்டணி என்பதை உணர்ந்துதான் 
2019-நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-சட்டப்பேரவைத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மகத்தான ஆதரவை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டைக் காப்பாற்றும்; மாநில உரிமைகளை மீட்டுத்தரும்; சனாதன சக்திகளின் சதிகளை முறியடிக்கும்; சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் என்ற மாபெரும் நம்பிக்கை மக்களிடையே உறுதியாக இருக்கிறது.


இந்தக் கூட்டணி பெற்றுவரும் வெற்றிகள் அதன் சாட்சியமாகும்.  இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஓரிரு இடங்களுக்காக இந்த கூட்டணியின் கட்டுக்கோப்புக் குலைந்துபோக அனுமதித்தால் வரலாற்றுப் பழிக்கு நாம் ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால்தான் ‘கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்’ என உரிமையோடும் நம்பிக்கையோடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோளில் உள்ள நியாயத்தை அங்கீகரித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.


தற்போது நேர்ந்த குழப்பங்கள் பதவி மீதான மோகத்தினால் ஏற்பட்டவை என்று நாங்கள் கருதவில்லை. தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்பட்ட குழப்பம் இது. நேரடித் தேர்தலாக இருந்தால் இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்காது.  அதனால்தான் இந்தப் பொறுப்புகளுக்கும் நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


‘பதவி என்றுகூட சொல்லக்கூடாது பொறுப்பு என்று தான் கூற வேண்டும்’ என்று அண்ணன் தளபதி அவர்கள் ஒவ்வொருமுறையும் சுட்டிக்காட்டுவார். இன்றைய அறிக்கையிலும்கூட அந்த சொல்லைத்தான் அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு அளித்த அருங்கொடையான ‘கடமை -கண்ணியம் - கட்டுப்பாடு’ என்ற மந்திரச் சொற்களை சுட்டிக்காட்டி கட்டுப்பாடு என்பது எந்த அளவுக்கு முதன்மையானது என்பதையும் அவர் வலியுறுத்தி இருக்கின்றார். அத்துடன், மதவெறி, சாதிவெறி ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகிற நாம், கட்சிப் பற்று, பதவிஆசை  போன்றவை  நமது கண்களை மறைத்துவிட அனுமதிக்கக்கூடாது என்பதே திமுக தலைவர் அவர்களது அறிக்கையின் அடிநாதமாக வெளிப்படுகிறது.


திமுக தலைமையில் அமைந்திருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தத் தேர்தல்களைக் கடந்து  மிகப்பெரிய அளவிலான பொறுப்புகளும் இலக்குகளும் இருக்கின்றன. அதை நாம் உள்ளத்தில் தேக்கி உறுதியோடு முன்னேறி செல்வோம் என அண்ணன் தளபதி அவர்களின் அறிக்கை நம்மை அறைகூவி அழைக்கிறது.


தேர்தல் ஆதாயங்களுக்காக அமைக்கப்படும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகவே இருக்கும். எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி இன்று சிதறி சின்னாபின்னம் அடைந்ததற்கு அது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருந்ததே அடிப்படை காரணமாகும். அதற்கு மாறாக கொள்கை எனும் அடித்தளத்தின்மேல் தோழமை என்னும் உணர்வால் கட்டப்பட்ட கூட்டணி இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்குத் தலைமை ஏற்றிருக்கும் அண்ணன் தளபதி அவர்கள் தமது அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கும் தோழமை உணர்வை விடுதலைச் சிறுத்தைகள் முழுமையாக புரிந்துகொண்டு உள்வாங்கி கொள்கிறோம்.  சமூகநீதி காக்கும் அளப்போர்க் களத்தில் திமுக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அண்ணன் தளபதி அவர்களோடு என்றென்றும் உடன் நிற்போம்; உற்றத் துணையிருப்போம்  என்று உறுதியளிக்கிறோம்.


அத்துடன், வருங்காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைமை பொறுப்புகளை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.