பாமக முழு கடை அடைப்பு:  கடலூரில் பாமக சார்பில் முழு கடை அடைப்பு போராட்டம் காரணமாக அம்மாவட்டத்தில் 10 எஸ்பிகள் தலைமையில் 7000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக என்எல்சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையை ஏவி விட்டு அடக்கு முறையை கையாண்டு இருப்பதாகவும், நிலம் சமன் செய்யும் பணியை நிறுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வழக்கம்போல் பேருந்துகள் மற்றும் கடைகள் இயங்கும் எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையின் சார்பில் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது. மேலும், சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


கடலூர் மாவட்டம் முழுவதும் 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு கமெண்டர் எஸ். பி தலைமையில் 7000 காவல்துறையினர் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இழங்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி முழு அடைப்பு அழைப்பால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படவில்லை. 


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:


முன்னதாக, என்.எல்.சி குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில், “மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு, காவல்துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அது கண்டிக்கத்தக்கது.


என்.எல்.சி நிறுவனத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் சுரங்கம் அமைப்பதற்கு தயார் நிலையில், என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பது ஏன்? அவ்வாறு துடிக்கும் என்.எல்.சிக்காக தமிழக அரசு அதன் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி மக்களை மிரட்டுவது ஏன்? அப்படி மிரட்டினால் தான் மக்களிடமிருந்து மற்ற நிலங்களையும் பறிக்க முடியும்? என கருதுகிறதா?


என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்குமுறைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் அஞ்ச மாட்டார்கள். என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற்றி, உழவர்களைக் காக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். அதன் ஒரு கட்டமாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு உழவர்களின் நிலங்களை சமன்படுத்தி கட்டுப்பார்ட்டில் எடுக்கும் என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் இந்த அறவழிப் போராட்டம் நடத்தப்படும். மண்ணைக் காப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என இவ்வாறு தெரிவித்திருந்தார்.