பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்


பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் பொங்கல் பொருள்களான பானை,  கரும்பு, மஞ்சள் கொத்து, கூலப்பூ போன்றவற்றை வாங்க, நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது
.



தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங்கல், இன்று போகி பண்டிகையுடன் துவங்குகிறது. நாளை கொண்டாடப்பட உள்ள சூரியன் பொங்கல், நாளை மறுநாள் மாட்டுப் பொங்கல்,17-ல் காணும் பொங்கல் ஆகிய திருவிழாக்களுக்கு பொதுமக்கள் காய்கள், பழங்கள், மஞ்சள் கொத்து, கரும்பு, தேங்காய், உள்ளிட்ட பொருள்களை, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாங்கி சென்றனர்.தேங்காய் ஒன்று, ஒரு கிலோ 28 ரூபாய் முதல், 30 ரூபாய் வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரையிலும், வாழைப்பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 30 ரூபாய் முதல், 60 ரூபாய் வரையிலும், தக்காளி ஒரு கிலோ, 26 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ₹50 க்கும், புடலை, 30 ரூபாய்க்கும், கேரட், 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய், 45 ரூபாய்க்கும்,  கத்தரிக்காய், 35 ரூபாய்க்கும், அவரைக்காய், 60 ரூபாய்க்கும், பாகற்காய், 40 ரூபாய்க்கும், முள்ளங்கி, 20 ரூபாய்க்கும், பீன்ஸ், 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ், 30 ரூபாய்க்கும், செங்கரும்பு, ஒரு ஜோடி, 100 ரூபாய்க்கும், முருங்கைக்காய், 120 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 40 ரூபாய்க்கும், கொத்தவரங்காய், 40 ரூபாய்க்கும் விற்றது.


 



 


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கரூர் பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்ல குவிந்தனர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பான பயணம் செய்யுமாறு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணன், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கலர் பொடிகள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்


 



 


கரூர் ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும், கலர் பொடிகள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். போகிப் பண்டிகையை ஒட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும், ஆவாரம்பூ, கூலாப்பூ, தும்பை பூ, வேப்பிலை ஆகியவை உள்ள ஒரு கட்டு 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.கரூர் வாழை மார்க்கெட்டில் பூவன் தார், 400 ரூபாய்க்கும், ரஸ்தாலி மற்றும் கற்பூரவல்லி தார், 450 ரூபாய்க்கும், மொந்தன், 350 ரூபாய்க்கும், செவ்வாழை தார், 650 ரூபாய்க்கும், பச்சை நாடான், 400 ரூபாய்க்கும் ஏலம் போனது.


கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி


கரூர் பஸ் ஸ்டாண்டில், பழுதடைந்த வாகன வளாக கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதியில், செட் அமைக்கப்படாததால், பயணிகள் பனி, வெயிலில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றன.


கரூர் பஸ் ஸ்டாண்டில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் இருந்த, வணிக வளாக கட்டிடம் கடந்த மாதம் முழுமையாக, இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்தப் பகுதியில் இருந்த புறக்காவல் நிலையம், பயணிகள் ,காத்திருப்பு கட்டிடமும் இடிக்கப்பட்டது. தற்போது திறந்த வெளியாக உள்ள அந்த இடத்தில், பயணிகள் நிற்க வசதியாக ஷெட் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பஸுக்காக திறந்தவெளியில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.


இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல, நேற்று காலை ஏராளமான பயணிகள், குழந்தைகள், பெரியவர்களுடன் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில், ஷெட் அமைக்கப்படாததால், பயணிகள் பஸுக்காக கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர்.


நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இன்று கூடுதலாக பயணிகள் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வர வாய்ப்புள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கரூரில் சாயப்பட்டறை, கொசுவலை நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் இன்று ஊர் திரும்பும் நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நலன் கருதி, பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட  இடத்தில், தற்காலிகமாக ஷெட்  அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.