வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கட்டுப்படி சாலை  பகுதியை சேர்ந்தவர் கிளி என்கின்ற சதீஷ் வயது (34). இவர், வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இவர், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், 2021-ம் ஆண்டில் இருந்து கிளி சதீஷின் பெயர் ரெளடிகளின்  பட்டியலில் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் மேலும் அரக்கோணம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான், கடந்த 6 மாதங்களுக்கு முன் கிளி என்கின்ற சதீஷுக்கு, வேலூர் மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க வில் பதவிக்கு வந்ததிலிருந்து, அரசியல் ரீதியான அட்ராசிட்டிகளிலும் கிளி சதீஷ் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


கடந்த 4-ம் தேதி கிளி சதீஷ் தனது பிறந்தநாளை அட்ராசிட்டியோடு கொண்டாடியிருக்கிறார். அதில் குற்ற பின்னணி உடைய நண்பர்கள் கலந்துகொண்டு சதீஷுக்கு ஆளுயுர மாலை போட்டு மது விருந்துடன் கொண்டாடியதாகவும் சொல்லப்படுகிறது.



பாஜக இளைஞர் அணி தலைவர்  கைது 


அப்போது கிளி சதீஷ்க்கு பில்டப் கொடுத்து  கானா பாடலும் உருவாக்கப்பட்டு யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளனர். அதில், "மோதிப் பாரு முன்னால பேசாதிங்க பின்னால கிளி சதீஷ் அண்ணன் பண்ணதெல்லாம் அரக்கோணத்தில் கேட்டுபாரு தரமான சம்பவம்” என கிளி சதீஷீன் ரெளடிசம் குறித்து புகழ்ந்து பாடியுள்ளனர்.


அதனைத்தொடர்ந்து  தான் 17-ம் தேதி மாலை  பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை வழிமறித்த கிளி என்கிற சதீஸ், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாக பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் விஜய் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பள்ளிகொண்டா காவல்துறையினர்  கிளி என்கிற சதீஷ்  மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். இதேபோன்று வழிப்பறி வழக்கில் கிளி சதீஷின் கூட்டாளிகளும் பா.ஜ.க நிர்வாகிகளுமான இரண்டு இளைஞர்களை காட்பாடி காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.


நேற்று 18-ம் தேதி காலை வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.




வழிப்பறியில் ஈடுபட்ட  பாஜக பிரமுகர் 3 பேர் கைது 


அப்பொழுது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் கத்தி காட்டி மிரட்டிய இருவரையும் பிடித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.


விரைந்து சென்ற காட்பாடி காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் அதில் விருதம்பட்டு டி.கே புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பது தெரியவந்தது. இதில் ராஜேஷ் பாஜக தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக  இருப்பதும் நவீன் குமார் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்தது.


பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடி கிளி சதீஷ் உட்பட பாஜக பிரமுகர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.