தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக இப்பண்டிகை கடைபிடிக்கப்படுவதாக ஐதீகம். இந்துக்கள் மட்டுமல்லாது சாதி, மதம் வேற்றுமையில்லாமல் கொண்டாடப்படுவது தான் தீபாவளி. பொதுவாக தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில், அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் முதல் பாதியில் வருவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. 


இப்பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவது பலருக்கும் கவலையளித்து உள்ளது என்றாலும், குடும்பத்தோடு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடலாம் என்ற நினைப்பு அதனையெல்லாம் மறக்க செய்து விடும். இப்போதே ஆடைகள் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் அனைவரது எதிர்பார்ப்பும் தீபாவளி பண்டிகையை நோக்கி திரும்பியுள்ளது. இப்படியான நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. 


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் அங்கு பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கடைகள் அமைக்கும் பணி டெண்டர் முறையில் கோரப்பட்டு, மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (அக்டோபர் 29) முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை கிட்டதட்ட 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. இதற்காக சுமார் 55 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பட்டாசுகள் வாங்கி பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


குறைந்து வரும் பட்டாசு விற்பனை


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு விற்பனையானது சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் பட்டாசு வெடிப்பதால் எழும் புகை காற்று மாசுபாட்டை உருவாக்குவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அதுவும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. மேலும் கடந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பட்டாசு வாங்கவும் பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. நடப்பாண்டு அந்த பிரச்சினை எல்லாம் சரியாகும் என பட்டாசு வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: TN Medical Camp: இருமல், காய்ச்சல் இருக்கா? தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் - உடனே செக் பண்ணுங்க