சென்னையில் டி.வி.எஸ் குழுமத்தின் டி.எஸ்.சீனிவாசனின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”டி.வி.எஸ்  நிறுவனத்தை பற்றி நான் உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டினுடைய தொழில் முகத்தை காட்ட வேண்டும். என்றால் அதற்கு ஒரு முகமாக – டி.வி.எஸ். நிறுவனத்தைக் காட்டலாம்.


இதற்கு அடித்தளம் அமைத்தவர் தொழில் மேதைகளில் ஒருவரான டி.வி.சுந்தரம். இன்றைக்கு லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் எத்தனை வந்தாலும் ஏழைகளுக்கான வாகனமாக இருந்தது TVS - 50 வாகனம் தான். ஏழை - எளிய சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ஒளிவிளக்கு அந்த வாகனம். தென் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்குள் முதலில் சென்ற வாகனம் TVS தான்” என்றார்.


"அரசியல் பேசுவதாக நினைக்கத் தேவையில்லை"


தொடர்ந்து பேசிய அவர், ”இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வந்தது. உடனே கரிவாயு மூலம் வாகனத்தை இயக்குகிற பங்க் வைத்தார். பேருந்து இயக்குவது - பாகங்களை தயாரிப்பது - வாகனங்களை உருவாக்குவது போன்ற கிளைத் தொழில்கள் எல்லாவற்றையும் தொடங்கியதால்தான், இன்றைக்கு 80 நாடுகளில் டி.வி.எஸ் நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இத்தகைய மாபெரும் மனிதர், தன்னுடைய வாரிசுகள் எல்லோரையும் தொழில் துறையில் ஈடுபடுத்தி வளர்த்திருக்கிறார். தாத்தா - மகன் - பேரன் – கொள்ளுப்பேரன் என்று டி.வி.எஸ்-ன்ற மூன்றெழுத்தை காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.


டி.வி.சுந்தரனை போலவே அவருடைய மகன் சீனிவாசனும் இந்த தொழிலில் புதுமைகளை புகுத்தி விரிவுபடுத்தினார். சீனிவாசனின் மகன் வேணு சீனிவாசனும் இதை இன்னும் சிறப்பாக செய்துகொண்டு வருகிறார். வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டி.வி.எஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என்று சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்து வெற்றிக்கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.


”அரசு, தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்"


மேலும், "இன்றைக்கு நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரக் கூடிய சீனிவாசன் அவர்கள், இந்த டி.வி.எஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர். தொழிலதிபர்களில் பலவகை உண்டு. சிலருக்கு நிர்வாகத் திறன் இருக்கும். சிலருக்கு தொழில் நுட்ப அறிவு அதிகமாக இருக்கும். சிலர் நேர காலம் பார்க்காமல் உழைப்பார்கள். சிலர் புதுமைகளை புகுத்துவார்கள். சிலர் தொழிலாளர்களே முக்கியம் என்று நினைப்பார்கள். இவை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றவராக டி.எஸ்.சீனிவாசன் அவர்கள் இருந்தார். இதுதான் அவருடைய சிறப்பு. வெற்றிக்கும் காரணம்.


தொழில் துறையைப் பொறுத்தவரை, அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டு வளர்ச்சியை அடைய வேண்டும். டி.வி.எஸ் போன்ற புதிய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். நூற்றாண்டு விழா நாயகர் சீனிவாசனைப் போன்ற தொழில் மேதைகள் உருவாக வேண்டும். வேணு சீனிவாசன் போன்ற தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவை. அதற்கு இது போன்ற விழாக்கள் ஊக்கமளிப்பதாக அமையும்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.