TN Fishermen: தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
21 தமிழக மீனவர்கள் கைது:
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 21 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 படகையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ஒரே நாளில் 37 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. முன்னதாக, தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 16 மீனவர்களை கைது செய்ததோடு, 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தொடரும் இந்த கைது நடவடிக்கைகளால், மீனவர்கள் அச்சத்தில் இருப்பதோடு அவர்களின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
தொடரும் சோகம்:
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், ஐந்து நாட்களுக்குப்பின் கடந்த 21ம் தேதியன்று தான் மீண்டும் கடலுக்கு சென்றனர். பாக் ஜலசந்தி கடற் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மிரட்டி விரட்டியடித்தனர்.
இதேபோன்று, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து பைபர் படகில் சென்ற மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், தமிழக மீனவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி மற்றும் மீன்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர். கடந்த 21ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மாலத்தீவிலும் கைது:
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து கடந்த 1ம் தேதி, விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரியும், முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.