தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,43,427 ஆக அதிகரித்துள்ளது. இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3 பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
முன்னதாக, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை அமைக்கும் பணிக்காக லண்டன் சென்றிருந்த திரும்பிய நடிகர் வடிவேலுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் டிராப் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில், 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 685 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,99,994 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.6 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,185 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,68,26,433) கோடியாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா மற்றும் ஓமிக்ரான பாதிப்பு அதிகரித்து வரும் 10 மாநிலங்களுக்கு பல்துறை நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பு மருந்து குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளுக்கும் இந்தக் குழு அனுப்பப்படுவதாக சுகாதாரத் துறையினர் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மிசோரம், கர்நாடகா, பீனர், உத்தரப்பிரதேசம். ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குச் சென்று இந்தக் குழுவினர் 3 முதல் 5 நாட்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒமிக்ரான் தொற்று:
உலகம் நான்காவது பெருந்தொற்று அலையை சந்தித்து வருகிறது. நோய் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக சந்தேகப்படும் நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கண்காணிப்பை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.
முன்னதாக, தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்