செய்தியாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் டி.டி.எஃப் வாசனுக்கு எதிராக காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


டி.டி.எஃப். வாசன்:


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் வைகுண்ட வாசன் எனப்படும் டி.டி.எஃப் வாசன். யூடியூபரான இவர் மோட்டார்சைக்கிளை அதிவேகமாக ஓட்டியும், சாகசங்களில் ஈடுபட்டும் வீடியோவாக எடுத்து அதனை தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அந்த வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் வாசனின் ரசிகர்களாக வலம் வருகின்றனர். கடந்தாண்டு அவரது பிறந்தநாளுக்கு கூடிய கூட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு, வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணம் செய்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி காவல்துறையாலும் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் எழுதி கொடுத்தார். இதனால், அவ்வப்போது அவர் பேசுபொருளாக மாறி வருகிறார். 


அய்யப்பன் VS டி.டி.எஃப். வாசன்:


இதனிடையே,  தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஊடகவியாலாளர்  அய்யப்பன் ஒருமுறை, வாசனை நேர்காணல் எடுத்துள்ளார். அப்போது அய்யப்பன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வாசன் பாதியிலேயே வெளியேறினார். இதனால் அவர்கள் இடையே கருத்து மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தான் அய்யப்பனை மிரட்டி வாசன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.


கொலை மிரட்டல் விடுத்த வாசன்:


ஒருதரப்பிற்கு ஆதரவாக பேசுவதற்காக அய்யப்பன் பணம், பொருட்கள் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், அது குறித்து டி.டி.எப் வாசன் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,  பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி அய்யப்பன் ராமசாமியை கடுமையாக விமர்சித்த வாசன், நீ மட்டும் என் கையில் கிடைத்தால் உன் மூஞ்சிய உடைப்பேன்,  உன்னை எங்கு பார்த்தாலும் விட மாட்டேன் என பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 


வழக்குப்பதிவு:


வாசன் கொலை மிரட்டல் தொடர்பாக குறிப்பிட்ட யூடியூப் நிறுவனம் தரப்பில், காரமடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:


இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் தனக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த வாசன், தற்போது தனியார் யூடியூப்பை சேர்ந்த ஒருவரை மிரட்டுகிறார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.