தமிழ்நாடு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பட்ஜெட்டின் தொடக்க உரையில் பேசியதாவது,


“ கடந்தாண்டு வரவு-செலவு திட்டத்தில் நிதி மற்றும் நிர்வாக நலனை கருத்தில்கொண்டு, பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்தோடு, சமூக நலனையும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாக கொண்டு பல நலத்திட்டங்களும் வகுக்க்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில் இந்தாண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.


சவால்கள்:


சமூகநீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய நான்கு அடிப்படை தத்துவங்களை கொண்டு நம் நாட்டிற்கே ஒரு கலங்கரை விளக்கமாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது. வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலகப்பொருளாதார நிதிச்சந்தைகளிலும் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற பல சவால்களையும் வரும் நிதியாண்டில் நாம் எதிர்நோக்கியுள்ளோம்.




தேசிய அளவோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம் மாநிலத்தில் கடந்தாண்டு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறையையும் ஒன்றிய அரசைவிட கணிசமாக குறைத்துள்ளோம். இது முதலமைச்சரின் தலைமைப்பண்பிற்கும் நிதி மேலாண்மைக்கும் சான்றாகும்.


வருவாய் பற்றாக்குறை:


கடந்த 2 ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவில் பல கடினமான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேற்கும்போது சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளோம்.




கொரோனா தொற்று காலத்திற்கு முந்தைய 2019-2020ம் ஆண்டின் பற்றாக்குறையை ஒப்பிட்டாலும், ஏறத்தாழ ரூபாய் 5 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகும். அரசின் நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்புமின்றி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்.


வரி வருவாய் வீழ்ச்சி:


இந்த அரசு பதவியேற்றபோது சந்தித்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையுள்ள ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரி 8 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு 2020-2021ம் ஆண்டு 5.58 சதவீதமாக குறைந்தது.


மகாராஷ்ட்ரா, கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக இந்த விகிதம் 6.11 சதவீதமாக  தற்போது உயர்ந்துள்ள போதிலும், இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம். வரும் ஆண்டுகளிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுரைகளை மனதில் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.”


இவ்வாறு அவர் பேசினார்.