கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு கொரொன தடுப்பு நடவடிக்கைக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை , மாநகராட்சி அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அரசியல் நாகரிகம் கருதி எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு அமைச்சர்கள் அருகில் முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,”கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் பகிரப்பட்டது. மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகர்களில் சென்னையில் இருப்பது போன்று வார் ரூம் தொடங்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் எங்களிடம் அறிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதில் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியோடு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகள் அரசுக்கு குறைவாகவே வருகிறது அதிகமான மருத்துவமனைகளும் அந்த மருந்தை பரிந்துரை செய்வதால் மக்கள் மையங்களில் குவிந்து வருகின்றனர். முதல்வர் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக வேகமாக எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் 18 வயது முதல் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 45 கோடி மதிப்பீல் 15 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. கோவையில் படுக்கை வசதிகளைக் அதிகரித்து சித்தா, ஆயுர்வேதம் , ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த அளவில் ஆக்சிசன் பயன்படுத்தி நோயாளிகளைக் சிறப்பாக மருத்துவர்கள் குணமாக்கி வருவது பாராட்டுகுரியது. அரசு மருத்துவனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் வைக்க போதிய வசதி இல்லை என்பதை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி என்னிடம் தெரியப்படுத்தினார். அதனால் உடல்களைக் வைக்க கூடுதல் இடங்களைக் ஒதுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், ஆலோசணைக் கூட்டத்திற்கு முன்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா கொரோனா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.