செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் 13 பேர் ஆக்சிஜன் இல்லாமல் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவத்தில் தொழில்நுட்ப பிரச்னை இருந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அது எது மாதிரியான தொழில்நுட்ப பிரச்னை, எப்படி அந்த தொழில் நுட்ப பிரச்னை நடந்தது, யார் அதற்கு காரணம், என்பது தொடர்பான எந்த அறிக்கையும், விளக்கவும் இது வரை தெரிவிக்கப்படவில்லை. 




இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் இருப்பை கண்காணிக்க சப் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது  தெரிவித்த விளக்கம்:


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் கிலோ ஆக்சிஜன் தேவைப்படுகிறது.  மூன்று நாளைக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தினமும் 6 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் நிறப்பப்பட்டு வருகிறது. நேற்று இரவு 200 படுக்கைகள் கொண்ட வார்டில் 176 பேர் சிகிச்சையில் இருந்தனர்.  இதில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 40 வயதிற்க்கு உட்பட்டோர் 5 நபர்கள்.  80வயதுக்கு மேற்பட்டோர் 2பேர். இறந்தவர்களில்  8 ஆண்கள், 5பெண்கள் உள்ளிட்டோர் அடங்குவர். நேற்று அனுமதிக்கப்பட்டோர் மட்டுமே 7 பேர் இறந்துள்ளனர். இறந்த 13 பேரில் 12 பேர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் ஆக்ஸிஜனை கண்காணிப்பதற்காக தனி சார் ஆட்சியர்(சப் கலெக்டர்) நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்,  என தெரிவித்தார்.




மாவட்ட ஆட்சியரின் இந்த விளக்கம் மூலம் ஏதோ ஒரு பிரச்னை தான் உயிரிழப்பிற்கு காரணம் என தெளிவாக தெரிகிறது. அது ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கலாம். அல்லது ஆக்சிஜன் இருந்தும் அதை வழங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மருத்துவமனையின் தவறின் காரணமாக தான் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. 


இறந்தவர்களில் ஒருவர் மட்டுமே கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர் என ஆட்சியர் கூறுகிறார். அப்படியென்றால் கொரோனா தொற்று இல்லாமலேயே 12 பேர் மூச்சு திணறலில் இறந்தது எப்படி? அப்படியென்றால் அவர்களுக்கு என்ன நோய் பிரச்னை இருந்தது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த ஆக்சிஜன் சப்ளையும் பாதிக்கும் அளவிற்கு என்ன தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது? அது எப்படி சரிசெய்யப்பட்டது? அல்லது இன்னும் அந்த பிரச்னை நீடிக்கிறதா? அப்படி நீடித்தால் அங்கு சிகிச்சை பெறுவோரின் நிலை என்ன? இப்படி பல்வேறு சந்தேகங்கள் அப்பிரச்னையில் தொடர்கின்றன. ஆனால் இது வரை அரசு தரப்பில் எந்த தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.