பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.



கொரோனா தொற்று இருந்தால் அதை சரி செய்ய மூலிகைகள் கலந்த நீராவியை சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கிறது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொது இடங்களில் கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக நீராவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பயணிகளுக்கு நீராவி பிடிக்கும் வசதி செய்யப்பட்டு, பயணிகள் ஆவி பிடிக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வெளியானது. இதனை பார்த்த மருத்துவர்கள் பலர் பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் கொரோனா பரவலை அதிகரிக்க மேலும் வழிவகுக்கும் என்று கருத்து கூறினர்.





இந்நிலையில்,  பொது இடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், “பொது இடங்களில் ஒரே நேரத்தில் பலர் ஆவி பிடிக்கும்போது  நுரையீரல் பாதிப்படையும். எனவே,  பொதுஇடங்களில் ஆவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது” என்று கூறினார். மேலும், தொண்டு நிறுவனங்களும் , அமைப்புகளும் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் வசதிகளை நிறுவ வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்,


சென்னை, திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட ஊர்களில் பொது இடங்களில் மக்கள் ஆவி பிடித்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.