இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதில், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஒரு  லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 




தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதலமைச்சர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.


அந்த ஆலோசனை முடிவில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ஆம் முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி, தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின்போது, தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகள் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் 


* அனைத்து கடைகளும் இரவு 9 மணிக்கு மூட வேண்டும்.


* கடற்கரைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்படும்.


* ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை


* தேநீர் கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள் மற்றும் உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி


* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி.


* அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லை.



ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரவில் தேவையின்றி ஊர்  சுற்றுவோர், கேளிக்கைகளுக்குச் செல்வோர் இரவு நேரம் வலம் வருவதை தவிர்க்கவும். அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அபராதம் கட்டாயம். அதை உணர்ந்து பாதுகாப்போடு வீட்டில் இருங்கள். அப்போது தான் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரமடையாமல் இருக்கும்.