கொரோனா பரவல் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உச்சம் பெற்று வரும் நிலையில், நாள் தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரங்களை கடந்து செல்கிறது. ஒவ்வொரு நாளும் உச்சம் தொடும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தரப்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


அதுமட்டுமின்றி திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். வழிபாட்டு தலங்கள், திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச்சடங்குகளில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்கிற விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளும் தீவிர கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 




கிட்டத்தட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறை சார்ந்த நடவடிக்கையிலும் புதிய ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் தமிழத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர உள்ளது. அத்தோடு கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.




சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்,  அரக்கோணம் ரயில் நிலையம், காட்பாடி ரயில் நிலையம், செங்கல்பட்டு ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வரையறை வெளியிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மட்டுமே நிலையங்களில் அனுமதி என்கிற விதிமுறையை நடைமுறைப்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி  முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் எனப்படும் நடைபாதை டிக்கெட் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை தெற்கு ரயில்வே விடுத்துள்ளது.  இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 




ரயில் போக்குவரத்து தொடர்ந்து வரும் நிலையில்,பயணிகளை தவிர்த்து அவர்களை வழியனுப்புவதற்காக வருவோர் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலே குறிப்பிட்டுள்ள ரயில் நிலையங்களில் தான் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 




ரயில் பணிகளை தவிர வேறு நபர்கள் நிலையத்திற்குள் வந்தால், அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் தேவை என்பதால் அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசின் ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை நேற்று இரவிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதால் ரயில் பயணிகளை தவிர்த்து பிறர் ரயில் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.