தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,659 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது. கடந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4206 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை உச்ச நிலையை அடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் கோவிட் தொற்றினால் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 13,557-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11,065 கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த குணமடைவோர் விகிதம் 89.03% ஆக உள்ளது.
சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை:
தற்போது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் ( Active cases) எண்ணிக்கை 1,05,180. இது, மொத்த பாதிப்பில் 9.44 சதவீதமாக உள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. அதாவது, இந்த மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளன.
கோவிட் - 19 மேலாண்மைக்கு ஆக்டிவ் கேசஸ் விகிதம் குறைவாக இருப்பது நல்லது. இது, கொரோனா சவாலை எளிதாக கையாள உதவும்.
இறப்பு எண்ணிக்கை விகிதம் :
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இறப்பு விகிதம் 1.26 சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திர பிரேதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 0.37, 1.09, 0.51, 0,75 சதவீதமாக உள்ளன.
சென்னை ஆக்டிவ் கேசஸ்:
தமிழகத்தை பொறுத்த வரையில், அதிகபட்சமாக, சென்னையில் 31,535 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 நாட்களுக்குப் பிறகு, சென்னையில் நேற்று புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வளர்ச்சி விகிதம் 97 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், சென்னையில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதம் ( Doubling Rate) தற்போது 13 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 8-ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மேலாண்மை:
தற்போது வரை தமிழகத்தில் கொரோனா படுக்கைகள் போதிய அளவில் உள்ளன. ஆனால், கொரோனா உச்ச நிலையை அடையும் போது, தமிழகத்தில் கடுமையான மருத்துவ தட்டுப்பாடுகள் எற்படும் என்று கணிக்கப்படுகிறது.
முகக்கவசம் அணிவது, சமூக விலகல் நெறிமுறைகளை கடைபிடிப்பது, கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது மூலம் கொரோனாவின் உச்சக்கட்ட பாதிப்பை கணிசமாக குறைக்கமுடியும் என்றும் மதிப்பிடப்படுகிறது.