கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சார்பில் கோவிசீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி வர கால தாமதம் ஆனதால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி முகாமில் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து தொடர்ந்து 5 நாட்கள் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது. 




தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 5-வது நாளாக பொதுமக்களுக்கு, தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கரூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் இரண்டு நாளில் கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கடந்த இரண்டு நாட்கள் முன் தகவல் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 1000 தடுப்பு ஊசி போடப்படும் எனவும், அவை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு எங்கு போடப்படும் எனவும் ஒரு சிறப்பு முகாமில் எவ்வளவு தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் விரிவான தகவல்களுடன் செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தனர். அதேபோல் இன்று ஒரேநாளில் கரூர் மாவட்டத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகள் போட ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் காலை ஆறு மணியிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் போலீசாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 




கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் தடுப்பூசி போடப்படும் முகாம்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபிறகு  பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு எங்களுக்கு டோக்கன் வழங்கியும், குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி இல்லை என அறிவித்து தங்களை அதிர்ச்சியடை செய்வதாக குற்றம் சாட்டினர்.


சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூடியிருந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதார துறை இணைந்து பேசி பொது மக்களுக்கு சிரமமின்றி தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் அங்கிருந்த பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார். 




கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படாததால் விரக்தியில் இருந்த பொது மக்களுக்கு இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் செய்தியால் சற்று ஆறுதல் அடைந்தனர். பின்னர் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். எனினும், தடுப்பூசி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நாள் தோறும் சிறப்பு முகாமில் போட வேண்டிய கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் இருப்பதால் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகையால் ஒரு சில இடங்களில் சில ,சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. 



கரூரில் ஐந்து நாள்களுக்குப் பிறகு  தடுப்பூசி முகாம் இன்று முதல் செயல்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.