27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை குறைக்க மேலும் ஊரடங்கை ஒரு வார காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Lion Corona Positive: வண்டலூர் பூங்கா சிங்கத்திற்கு புதிய வகை கொரோனா; மருத்துவ குழுவினர் அதிர்ச்சி!


இதுதொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.






 


ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!






மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.






 


முன்னதாக, நேற்று டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட  அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. நோய் தோற்று அதிகமாக பரவி வரும் 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.





எந்தெந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கிடையாது ?



கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொடர்ந்து நோய் தோற்று அதிகமாக காணப்படுகிறது, அதனால் நோய் பரவல் தீவிரத்தை குறைக்க இந்த குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி கிடையாது. மேற்குறிப்பிட்டுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14.06.2021 முதல் திறக்கப்படும். காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


TN Lockdown Extension : கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : என்ன இயங்கும், என்ன இயங்காது?