திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டத்தை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதன்மையான திட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு நிவாரண உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அதில் முதல் தவணையாக 2000 இந்த மாதம் 15ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்
அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று நியாயவிலைக் கடைகள் மூலமாக கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரில் உள்ள நியாய விலை கடையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை இணை பதிவாளர், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக் குழுத்தலைவர் தேவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பூண்டி கலைவாணன் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழக அரசின் சிறப்பு நிவாரண நிதி ரூ 2000 வழங்கும் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 728 நியாயவிலைக் கடைகள் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து இந்நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதிக்காக முதல் தவணையாக ரூ 75.30 கோடி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசுகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள தீவிர நடவடிக்கையின் காரணமாக விரைவில் கொரோனா நோய் குறைவதோடு முடிவுக்கு கொண்டுவரப்படும். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் தேவைக்கேற்ற ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவாக்குடியில் இருந்து ஆக்சிஜன் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. மக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுவதுமாக கடைபிடித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, பிறருக்கு பரவாமலும் உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பூண்டி.கலைவாணன் தெரிவித்தார்.